போதி மரத்தைப் பற்றிய நீள்கவிதை ஒன்று

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

போதி

பாலகனாய்

மரத்தைச் சுற்றி விளையாடும் பருவத்தில் தான்

அம்மரம் அவனுடன் அளவளாவத் தொடங்கியது

பச்சை பசேலென

எத்தனை இலைகள்

விரிவதற்குக் காத்திருக்கும் மொட்டுக்கள் பல

மணம் வீசும் மலர்கள்

பூக்களைத் தேடி வரும் பட்டாம்பூச்சிகள்

உனக்கு மகிழ்ச்சி தானே என்றது

சிறிது நேரத்தை அங்கு கழித்த அவன்

அவ்விடம் அலுத்துப் போகவே

மற்ற சிறுவர்களோடு விளையாட

மைதானம் நோக்கிச் சென்றான்

ஒவ்வொரு நாளும் அவன் வருவானென

எதிர்ப்பார்த்துக் காத்திருந்து

ஏமாற்றமடைந்தது அம்மரம்

விடலைப் பருவத்தில்

நண்பர்கள், திரைப்படம், கடற்கரை-என

சுற்றுவதற்கே

நேரம் சரியாகயிருந்தது அவனுக்கு

மரத்தை மறந்தே போனான்

காதல் அவன்

வாலிபக் கோட்டையை

முற்றுகையிட்டது

அகல்யா என்றொரு யுவதியின் தலைமையில்

காதலுக்கு மனம் தேவை

கல்யாணம் முடிந்து

குடும்ப ஓடத்தை தடையில்லாமல் நகர்த்த

பணம் தேவை - இதை உணர்ந்து

முதல் போட்டு தொழில் துவங்கி

சமூகத்தில் இன்னாரென முகவரியோடு

எனை அணுகுங்கள்

தலைகுனிந்து உங்கள் மலர்மாலையை

பெருமித்துடன் தோளில் ஏற்கிறேன்-என

அவள் கூற

வியாபாரம் தொடங்க

பணம் தேவையே

எப்படிப் புரட்டுவது - என

அவன் மரத்தடியில அமர்ந்து

சிந்திக்கும் வேளையிலே

மரம் அவனிடம் பகன்றது

உன் நிலை எண்ணிக் கலங்கினேன்

இவ்வளவு காலம் எனை மறந்து

வாலிபக் குதிரையில

தன்னிலை மறந்து பயணம் செய்தாய்

காதல் கைகூட

செல்வம் வேண்டுமென

அவள் நிஜத்தை உணர்த்தியபோது

தாமாகவே உனது கால்கள்

நான் இருக்கும் திசையில் திரும்பி

என் நிழலை நோக்கி

வந்தமர்ந்து கொண்டன

துயரப்படாதே

உன் துன்பத்தைப் போக்க

வழியொன்று சொல்கிறேன்

என்னை வேரோடு வெட்டியெடுத்து

மரச்சாமான்கள் செய்யும்

தச்சனிடம் விற்றுவிடு

உனக்குப் பொருள் கிடைக்கும்

அகல்யாவின் அருகாமை

உன் இளமைக்கு

புத்துயிர் கொடுக்கும்

எனக் கூறி முடித்ததும்

அவன் முகத்தில் ஆயிரம்வாட்ஸ் பிரகாசம்

ஞானத்தினால் அல்ல

அவளை அடைய வழி தெரிந்ததினால்

அண்ணாந்து மரத்தைப் பார்த்தான்

கருணையினால் அல்ல

எவ்வளவிற்கு விலைபோகுமென்று

கண்காளாலே அளப்பதற்கு

விரைந்தோடினான்

அகல்யாவை அணைப்பதுபோன்ற

அவனுடைய லட்சியக் கனவை நனவாக்கிட

முதல் படியாக

மரத்தை வேரோடு சாய்த்திட

கோடாரியை எடுப்பதற்கு!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக