உறக்கமற்றவனின் விடியல்
அவனது கிழக்கில்
கதிரவன் உதிக்காது
சந்தன மரக்கட்டில் கூட
முள்படுக்கையாக மாறும்
அவனது உடலே
அவனுக்குப் பாரமாகும்
அந்த நாளில்
நரகத்தின் நிழல் வீட்டினுள் கவிந்து
அங்கிருந்த வெளிச்சத்தை விரட்டியடிக்கும்
கண்கள் ஜீவ ஒளியிழந்து
தூக்கத்திற்குத் தூண்டில் போடும்
தாயோ, தாரமோ எவரேனும்
தனது தலையை மடியில் வைத்து
கேசத்தை வருடமாட்டார்களா - என
அவன் மனம் மானிட ஸ்பரிசத்துக்கு
ஏங்கித் தவிக்கும்
மரணம்-கடவுளின் அன்புப் பரிசாகவும்
வாழ்வு-கருணையற்ற கடவுள்
தனது கொடிய கரங்களால் எழுதிய
தீர்ப்பாகவும் படும்
நிமிடங்கள் யுகமாகும்
போகங்களில் எந்நேரமும் திளைக்கத் தோன்றும்
விரக்தியின் விளிம்பில்,
றெக்கை முளைக்காத கூட்டுப்புழுவாய்
உயிர்வாழ்வதை விட
மடிந்து மக்கிப்போவதே மேலெனத் தோன்றும்
கனவுலோகத்தால் கைவிடப்பட்டவனின்
கற்பனை இப்படிப்போகும் -
வங்கியில் கணக்கு வைத்திருப்பவருக்கு
மட்டும் தான் இரவுப்பொழுதில் உறக்கம்
அப்பணத்திற்கு வட்டியாக அளிக்கப்படும்
என சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக நேற்று
செய்தித்தாள்களில் படித்தது போன்ற
ஞாபகம் எழும்
தூக்கம் ஒன்றே துக்கம் குறைக்கும்
இலவச நிவாரணி
அது கண்களைத் தேடி வந்து
தழுவாதபோது
வாழ்வு மகள் பூமாலையுடனும்,
புன்சிரிப்புடனும் எதிரில் நின்றாலும்...
அவன் கரங்கள்
மரண தேவதையை ஆரத்தழுவிக்கொள்ளும்.
சபிக்கப்பட்டவனின் வாழ்க்கை
மனிதர்கள் வேட்டையாடி பயி்ற்சி பெற
விலங்காய்ப் பயன்படுவான்
குருதியை யாரும் கண்டதில்லையா
அவனை கிழியுங்கள் இரத்தத்தை ருசியுங்கள்-
என அறிவிப்புப்பலகை தொங்கும் அவன் கழுத்தில்
கண்கள் மூடியே இருக்கும்
காணச்சகிக்காது இவ்வுலக நடப்பு ஒவ்வொன்றும்
வாய் இறைவனின் நாமத்தை
மறந்தும் உச்சரிக்காது
தப்பித்தவறி வந்து காப்பாற்றிவிடப் போகின்றானோ
என்ற அச்சத்தில்
காதுகள் எப்போதும்
துரோகச் செயலின் திட்டங்களை கேட்டே
நரக அவஸ்தை அனுபவித்துச் சாகும்
வாழ்க்கை துக்கமாகும்
மரணம் தாசியாகும்
எப்பொழுதும் அதைத் தேடியே
மனம் ஓடும்
உலக இயந்திரம் அவனை
கரும்புச் சக்கையாய்ப் பிழியும்
பெருங்கூட்டமொன்று அந்தச் சாறு போதையென
தண்ணீரில் கலந்து குடிக்கும்
இப்பூலகில் கொடிய வேதனையை
அனுபவித்தவன் மரணித்தால்
சொர்க்கத்தில் வாயிலை தெய்வம்
வந்தா திறக்கும்
அப்படி திறந்தால்
அவன் கடவுளல்ல
விழிப்புணர்வு பெற்று
தட்டுபவனே கடவுள்
திறப்பவன் அல்ல
கைவிடப்பட்ட இவ்வுலகில்
உன் மீது அறையப்படும்
ஒவ்வொரு ஆணியும்
உன்னை புனிதப்படுத்தும்
உயிர்த்தெழுதல் அன்றல்ல
இன்றும் நடைபெறலாம்
இன்னொரு யுக புருஷன்
அவனாகலாம்
அவன் உங்கள் எதிரிலேயே
நடமாடலாம்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக