பரஞ்ஜோதி
கனவே கனவே
கதை பல சொல்லு
மாயக் கண்ணன் வருவான்
அவள் கரம்பற்ற என்று
நிலவே நிலவே
நிழல் போல தொடர்ந்து செல்லு
எந்த ஆடவனும் ஆசை கொண்டு
எழிலரசியை பின்தொடராவண்ணம்,
அரணாய் நின்றிடு
அன்பை பேராயுதமாகக் கொண்டிடு
நதியே நதியே
நங்கையின் ஸ்பரிசம் உணர்ந்த நதியே
நாயகன் கண்முன் வரும் வரை
அவனை நினைப்பதால்
மங்கைக்கு எழுந்திடும் உள்ளக்கொதிப்பை
உனது நீரோட்டத்தினால்
நீ அடித்துச் சென்றிடு
காற்றே காற்றே
தோழி போல அவள் தேகம் உரசி
தேவியின் கன்னம் வெட்கத்தால்
சிவந்திடும வண்ணம்
தலைவனின் சுவாசக்காற்றின் அனலை
என்னால் தாங்க முடியவில்லையென
காதோரம் ரகசியமாய சேதியொன்று சொல்லிடு
மழையே மழையே
வானை பொத்துக் கொண்டு
மண்ணில விழும் மழையே
அவள் தேகத்தை நீ நனைப்பதால்
அணைந்துவிடாது
புவியரசியின் மோக நெருப்பு
சிலுவைப்பாடு
‘குழந்தை இயேசு’ படம்
அத்திப்பூத்தாற் போல்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அரிதாக வீடுகளை அலங்கரிக்கும்
‘மலைப்பிரசங்க’ப்படம்
குறிஞ்சி மலர் போல
வாழ்நாளில் இரண்டு தடவை
கண்ணில் அகப்பட்டாலே
பேரதிசயம் தான்
‘கடைசி விருந்து’ படம்
நாம் நுழையவே முடியாத,
மேல்தட்டு கனவான்களின்
ரசனையை திருப்தி செய்ய
அவர்களுடைய
மாடமாளிகையில் மாட்டப்பட்டிருக்கும்
‘சிலுவையில் அறையப்பட்ட இயேசு’வின் படம்
எலலா தேவாலயங்களிலும்,
கிறிஸ்தவர்களின் வீடுகளிலும்
நீக்கமற நிறைந்திருக்கும்.
இருள் அகன்றது... பேரொளி பிறந்தது...
மண்ணின் மைந்தர்களின்
கரங்களனைத்தும் ஒன்று சேர்ந்தது
வலிமை பிறந்தது; வனவாசம் முடிந்தது.
சிறிய அலைகளெல்லாம் ஒன்று சேர்ந்தது
ஓர் நாளில் ஆழிப்பேரலையாய்ப் பாய்ந்து
பரங்கியர்களை கப்பலேறிப் பயந்தோடச் செய்தது.
எண்ண அலைகளெல்லாம் ஒன்றில் குவிந்தது
விடுதலை அடைவதற்கு முன்னமே
அந்நிகழ்வைக் கனவு கண்டு இன்புற்று
ஆடிப்பாடும் பாடலாய் புனைந்த
கவிஞன் உள்ளத்திலிருந்து
தமிழ் ஊற்று பெருக்கெடுத்து
தேசத்தை நனைத்தது.
பலரின் செங்குருதி பாரத மண்ணில் கலந்தது
இனிவரும் தலைமுறையாவது
சுதந்திரப்பறவையாய் ஆகாயத்தில் சிறகுவிரிக்க...
அடக்குமுறைகளை எதிர்த்து நின்ற
மக்களின் எழுச்சி உச்சகட்டத்தை அடைந்தது
அதன் அதிர்வு தாங்காமல்
அடிமைக் கூண்டு உடைந்தது.
விடுதலை...விடுதலை...விடுதலை-
என்ற ஆனந்தக் குரல்
எங்கும் ஒலித்தது
எங்கள் மண்ணில் ஒலித்தது.
காந்தியின் கதராடையும், கைத்தடியும் ஜெயித்தது
பகட்டும், பீரங்கியும் கொண்டு யுத்தம் பல செய்து
மனித மாமிசத்தை ருசித்த குள்ளநரிக் கூட்டம் தோற்றது.
சரித்திரமானது சகலமும் சரித்திரமானது
அப்பக்கங்களைப் புரட்டிப்பார்க்குது
அகிலமே ஆச்சர்யத்துடன் இன்று புரட்டிப்பார்க்குது
மிருகஜாதி
சுற்றமும், நட்பும்
எனது ஊனச்சிறகுகளை
அவ்வப்போது
தங்களது கொடிய கரங்களால்
உடைத்தெறிந்துவிட்டு
நினைத்ததை முடித்ததில்
மனநிறைவு கொள்கின்றனர்
நிலை மாறும உலகில்
சற்றே தாழப்பறக்க நேர்ந்தாலும்
என் தலைக்கு மேலே
அவர்களின் உயரம் இருக்கும்படி
கவனமாய் பார்த்துக்கொள்கின்றனர்.
கானல்நீர்
அடர்ந்த இருள் கவிந்த
வாழ்க்கைப் பாதையில்
நிலைச்சுடரின் பிரகாசம்
கூப்பிடு தொலைவில்
கண்ணில் தெரிந்தது
அதை நோக்கி
எனது கால்கள் குதூகலமாய்
விரைந்து நடக்கத் தொடங்க,
அந்தச் சுடரை நெருங்க நெருங்க
அந்த பேரொளி வெள்ளம்
பின்னோக்கி தனது
கிரணங்களை இழுத்துக்கொண்டது
எனது கஷ்டங்களுக்கு
ஒரு தீர்வென்பது
பாலைவனக் கானல் நீரானது.
பூமராங் வாழ்க்கை
மண்ணும், காற்றும், நீரும்
கொஞ்சம் கொஞ்சமாக
உயிரோடு தின்றுகொண்டிருக்கின்றன
எனதுடலை
அதனை அலட்சியப்படுத்தி
செலுத்தப்பட்ட அம்புபோல
சுயப்பிரக்ஞை சிறிதும் அற்று
விரைந்து கொண்டிருக்கிறேன்....
எந்த வில்லினுடைய நாணின்
இழுவிசையிலிருந்து
எந்த இலக்கை நோக்கி
விடப்பட்டு இருக்கிறேன்
என்ற கேள்வி தோன்றி
வேதாளம் போல்
எனது தோளில் வந்தமர்ந்து கொண்டது
நான் இலக்கை சென்றடைவேனென
நம்பிக்கை வைத்து
என்னையவன் எய்து இருக்கின்றானா?
வழியில் எனது லயம் தவறிய
தப்புத்தாளங்களை
கண்ணிமைக்காமல் கவனித்துக்
கொண்டிருந்தானா?
மீண்டும் அவன் கைகளில்
தவழ நேருமோ
நியாயத்தீர்ப்புக்காக அவன் எதிரில்
கைகட்டி நின்று
சாட்சிக் கூண்டில் சிறைபட நேருமோ
அச்சூழ்நிலையில்
‘உனது படைப்பு பூரணமடையாத போது
எப்படி அந்தப் படைப்பு நடத்தும்
வாழ்க்கை பூரணமாக
இருக்கவேண்டுமென்று நீ ஆசைப்படலாம்? ’
என்ற கேள்வியை பதிலாக்கி
அச்சமற்று நின்றிடுவேன்
அச்சபையில்
மானுடத்தின் கேள்வியினை
நானொருவன் கேட்டிடுவேன்.






