சிறகிழந்த பறவை போல...

சனி, 26 மார்ச், 2011

நீ பார்ப்பாய் எனக் கருதியே

நானும் பார்க்கிறேன் நிலவை

இந்தப் பாடலை நீ எப்படி ரசிப்பாய் என

யோசித்துக் கொண்டே அந்தப் பாடலை

கேட்கிறேன்

உன் சுவாசப் பைக்குள்

புகுந்த காற்று

என்னிடம் உன்னைப் பற்றி

சங்கதி ஒன்று சொன்னது

என் பிரிவைத் தாங்காமல்

நீ சிந்திய கண்ணீர்த்துளிகளே

உலகில் பரிசுத்தமானது

அலையில் கால்களை நனைப்பது

உனக்குப் பிடிக்குமென்று

கடலைப் பார்க்கும் போதெல்லாம்

நினைத்துக் கொள்கிறேன்

திடீர் மழை உண்டாக்கிய

மண் வாசம்

உன் ஞாபகங்களை

கிளறிச் செல்கிறது

குடையை கையில் வைத்துக் கொண்டே

நாமிருவரும் நனைந்தபடி வந்தோம்

அந்த மழை நாளை மறக்க முடியுமா

நீ இல்லாத போது

ஊருக்கு வந்தால்

உன் காலடித்தடங்களை

தேடிப் பார்ப்பேன்

மண் மீது

நீ முதன் முதலாக

எனக்குப் பரிசளித்த கடிகாரம்

காலத்தைக் காட்டுவதற்குப் பதிலாக

கண்ணீரை வரவழைக்கிறது

நாம் வழக்கமாகச் சந்திக்கும்

ஆலமரத்தடி என்னை மட்டுமாய்

பார்த்து முகம் திருப்பிக் கொள்கிறது

சூடாத மலர்களாய்

விண்மீன் இல்லாத வானமாய்

இதழ்விரிக்காத பூவாய்

விடியலை வெறுத்தொதுக்கும் ஆகாயமாய்

நம் காதல்

பிரிவெனும் ஏக்கத்திலேயே

நெடுங்காலமாய்க் கழிகிறது.