‘தொலைந்து போன நிழலைத் தேடி’ கவிதைத் தொகுப்பின் முன்னுரை

வியாழன், 18 பிப்ரவரி, 2010

இவ்வுலகில் சிறு நகரத்தில் வாழும் ஒரு ஜீவனின் உயிர்த்தேடலின் ஆரம்பமே இக்கவிதைத் தொகுப்பு. வாழ்க்கையின் அன்றாடச் சலிப்புகள், சோர்வுகளை உள்ளத்திலிருந்து விரட்டியடித்து, தேடலே ஒவ்வொரு கணத்தையும் சுவாரஸியம் மிகுந்த ஒரு நாவலின் பக்கங்களை எதிர்ப்பார்ப்புகளோடு புரட்டுவதைப் போன்று

ஒவ்வொரு விடியலையும் எதிர்கொள்ள வைக்கிறது.நம்பிக்கைஇந்த ஒரு வார்த்தையை அடித்தளமாகக் கொண்டு மனிதவாழ் முழுவதும் கழிகிறது.நாளை விடியும் என்ற நம்பிக்கையே ஒவ்வொரு மனிதனையும் இந்த இரவினில் அமைதியாகப் படுக்கையில் உறங்கச் செய்கிறது. தேடலும், நம்பிக்கையும் இக்கவிதைத் தொகுப்பில் எங்கும் விரைந்து கிடப்பதைக் காணலாம்.

சில கவிதைகள் நான்கு அல்லது ஐந்து வரிகளில் முழுமை பெற்றுவிடும், சில கவிதைகள் இருபத்தைந்து வரிகளுக்கு மேலும் கருவின் மையத்தை நெருங்காது விலகியிருக்கும். கவிதை ஒரு உள்உந்துதலால் எழுதப்படுவது.வாசிக்க, வாசிக்க பல தளங்களுக்கு நம்மை பயணப்பட வைககிறது.உங்களின் முயற்சிகளை ஊக்கப்படுத்தியும்,விரக்தியை விரட்டியடித்தும், அன்புக்கு நீர் பாய்ச்சியும், அநீதிகளை அடித்துநொறுக்கியும்,இப்படி ஒரு மொழி தன் மண்ணின் மைந்தர்களைத் தன் எழுத்துக்களால் செயல்படவைக்கிறது.இதில் கவிஞன் ஒரு கருவியே, மொழியே எடுத்தாள்கிறது, அவ்வப்போது விஸ்வரூபம் கொள்கிறது. மொழியை கொச்சையாக,இழிவாகப் பேசுபவனிடத்தில் ஆயிரம் கரங்கள் கொண்டு சீறிப்பாய்கிறது.எந்த மொழியும் தான் செழித்தோங்கி வளர தானே முயல்கிறது. ஒரு கவிஞன் தான் வாழும் காலகட்டத்தில் தம்மைச் சுற்றி நிகழும கசப்பான நிகழ்வுகளை தன்னுள் சமரசம் செய்து கொண்டு, எழுத்துக்களால் அதனைப் பதிவு செய்யமால் போனால்,அச்சமூகத்தி்ற்கு அவன் செய்யும் மிகப்பெரிய துரோகம் அது. இக்கருத்தினை உடும்பென பிடித்துக் கொண்டு படைக்கப்பட்டவை இக்கவிதைகள்.

இவ்வளவு காலம் விசாலமான அரண்மணையைப் போன்ற படைப்புகளுக்குள் பயணம் செய்த வாசகர்களை எனது சி்று குடிசைக்கு அழைக்கின்றேன்; அங்கு மின்விளக்கு இல்லாத இருளில் தரைமீது உங்களின் நிழல்கள் விழாது, அக்கணத்தில் நீங்களும் தேடத் தொடங்குவீர்கள் உங்களின் தொலைந்து போன நிழலை.

இந்தச் சிறு விழுதும் இன்னும் சில காலங்களில், ஆலமரமாகிய குடும்பவிருட்சத்தை தாங்கும் என நம்பிக்கை கொண்டு, என் முயற்சிக்கும், எழுத்துக்கும் ஊக்கம் அளித்து வரும் எனது தாய்,தந்தைக்கு இப்படைப்பைச் சமர்ப்பணம் செய்வதில் பெருநிறைவு கொள்கிறது இந்தக் கவிமனம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக