உள்வெளிப்பயணங்கள்
வான்வெளியில் மேகங்களின்
அணிவகுப்பைப் போன்றது
மனதில் நினைவலைகள்
உற்றுப் பார்த்தால்
வெவ்வேறு உருவங்கள் புலப்படலாம்
அம்முகில் கூட்டங்களில்
கடிவாளமில்லாத புரவியென
ஐம்புலன்கள், திசைக்கொன்றாய்
மானிடனை இழுத்துச் சென்று
சகதியில் அவனை விழவைத்து
சுற்றத்தார் கைகொட்டிச் சிரிப்பதை
சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்கும்
மனப்பரப்பில் எரியும்
ஆசையெனும் வேள்வித்தீயில்
ஆகுதியாகும்
விட்டில் பூச்சியைப் போல்
மனித உடல்கள்
காலைக் கதிரொளி
பனிப்போர்வையை விலக்கியது
பறவைகள் ‘கீச்’சென்று சத்தமிட்டு
சிறகடித்துப் பறந்தன
மாலையில வாடிப்போய்விடுமோமென்று
வருத்தம் கொள்ளாமல்
மலர்கள் மலர்ந்து நின்றன
தென்றலின் பாடலை
மரங்கள் தலையசைத்து
ரசித்தன
தான் கரையில் ஒதுக்கிய கிளிஞ்சல்களை
வந்து பொறுக்கும் அரும்புகளைக் காண
கடலலை காத்திருந்தது
வைகறை மெளனத்தில் கீதம் பாட
தேவக்குயில் ஓடோடி வந்துவிட்டது
கருமேகத்தில் குமரக்கடவுளைக் கண்டது போல
தோகை விரித்தாடியது மயில்
வண்டுகள் அன்றுதான் முதல்முறையாக
தேனை சுவைத்தது போன்று
ரீங்காரமிட்டன
புல்லிதழ்களின் மீது படிந்திருக்கும்
பனித்துளி பிரியாவிடை பெற்றுச்சென்றது
இன்றைய பொழுது
நமக்கு இறைவன் அளித்தது
இயற்கை அதனை நன்குணர்ந்துள்ளது
மனித மனம் ஆதியிலிருந்தே அதனை
மறந்து வந்துள்ளது.
தொலைந்து போன நிழலைத் தேடி...
பால்யத்திலிருந்து
எனைத் தொடர்ந்து வந்த நிழல்
இன்று தொலைந்து போய்விட்டது!
எனது பாதத்தடங்கள்
கடந்துவந்த பாதையை உளவறிந்து
எங்கு போய்ச் சொன்னதோ?
உணவின்றி, நீரின்றி, காற்றின்றி கூட
ஒருவன் இப்புவியில் வசிக்கலாம்
நிழலின்றி இருக்கமுடியுமா?
மற்றவர்களின்
நிழல்களைப் பார்க்க நேரும்போதெல்லாம்
விசாரிக்கிறேன்
எனது நிழலின் நலத்தைப் பற்றி!
அப்பா என்கிற ஸ்தானம்
அவனுடைய மனைவியின்
முதல் பிரசவத்துக்கு குறிக்கப்பட்ட
அந்த நன்னாள் நெருங்கிக் கொண்டே வந்தது
பணியாற்றும் இடம்
பலமைல் தொலைவிலிருந்தும்
பிறக்கப்போகும் ஒரு உயிருக்காக
பிரார்த்தனை செய்தபடியே
அவன் இதயம் துடித்துக் கொண்டிருந்தது
அந்த நகரத்தின்
சாலையோரக் கடைகளில் ஒட்டப்பட்டிருந்த
சின்னஞ்சிறு குழந்தைகளின் படங்களும்
‘கற்பூரமுல்லை ஒன்று.... ’ -என எதேச்சையாக
அருகாமையில் ஒலித்த இனிய கானமும்
அவன் மனதைப் பிசைந்தன.
அன்றைய மாலைப் பொழுதில
அடுக்குமாடி வணிக வளாகமொன்றில்
‘டாடி’ என்றழைத்தபடி
ஓடிவந்த குழந்தையொன்று
தவறுதலாக அவன் கால்களைக்
கட்டிக் கொண்டது
சில வினாடிகள் கழித்து
அண்ணாந்து முகம் பார்த்து
தனது தந்தையல்ல என்றுணர்ந்த பின்னர்
அந்நியர் ஸ்பரிசத்தை தொட்டுவிட்ட
சங்கோஜத்தில் விலகிச் சென்றது
நிமித்தங்கள் அவன் தந்தையானதை
இந்நிகழ்வினால் உறுதிப்படுத்த
‘நான் அப்பாவாகிவிட்டேன்’ என்ற எண்ணம்
அவன் உள்ளத்தில் உதித்த அக்கணத்தில்
வாயில் கைப்பிடி சர்க்கரை போடாமலேயே
உடலில் ஓடும் உதிரம் கூட
அவனுக்கு இனித்தது.
இலையின் பாடல்
நான் இல்லாது போனால்
இப்புவியெங்கும் உள்ள
மரங்களனைத்தும்
மூளிகளாகும்.
நான் பச்சை
வண்ணம் சுமந்து
வசந்த காலத்தை
வளமுள்ளதாக்குகிறேன்.
நான் இன்னோர்
இலையாய்த் துளிர்க்க
வேனிற்காற்றின் வேகத்தில்
மரங்களினுடனான
உறவுப்பிணைப்பை
முறித்துக்கொண்டு
மண்ணில் விழுகிறேன்.
நான் காணுமிடமெங்கும்
நிறைந்திருப்பினும்
மலர்களின் மீது மட்டும்
மோகம் கொண்டலையும்
மனிதர்கள் என்னை
மரத்தின் ஒரு பாகமாக
மட்டுமே பார்க்கின்றனர்.
நானின்றி மொட்டு மலர்ந்திடுமா?
காய் கனிந்திடுமா?
மரம் நிலைத்திடுமா?
உணவாகிப் பல நோய்கள்
தீர்க்கிறேன்.
எருவாகிப் பயிர்களைக்
காக்கிறேன்
எரிபொருளாகி
வாகனங்களை
இயக்குகிறேன்.
என் மீது உரசாத காற்றை
சுவாசித்த நபருண்டா
இவ்வுலகில்?
பழுத்து மஞ்சளாகி
உதிரும்வரை
காலையில் நடைப்பயிற்சி
செல்லும் வழியெங்கும்
உங்களின் கண்களுக்கு
இதமாக இலவசமாய்
குளுமை தருகின்ற
பூமித்தாய் தன் மேனியில்
உடுத்தியிருக்கும்
பச்சை வண்ண ஆடை நான்!
மலைப்பிரசங்கம்
வசிக்குமிடம்
இடுகாடு என்பதால்
அருவருப்புக் கொள்ளவில்லை ஈசன்
நட்பு கொள்வது
வானரத்தோடு என்பதால்
கேவலமாய் நடத்தவில்லை ராமன்
யார் மீது
பட்டுத்தெறித்ததற்காகவும்
வெட்கப்படுவதில்லை மழை
உடல் மீது
எதிர்பாராமல் உரசியதற்காக
ஓடும் நதியில் முங்கி எழுவதில்லை
காற்று
அக்னி
எவ்வுடலையும் எரித்து
பொன்நிறச் சாம்பலைக்
கொடுத்ததில்லை
மனிதர்கள்பால்
பேதம் அகன்றவனே
பேராண்மை உடையவன்
வெறும் ஆண்மையால்
உலகினில ஆட்டுமந்தையாய்
ஜனத்தொகை மிகுந்தது போதும்
மேய்ப்பனின் மலைப்பிரசங்கம்
மீண்டும் தொடங்கட்டும்
இம்மண்ணுலகில்....
கலிங்கா
வாளில் குருதி வழிய
உடல்கள சிதறிக் கிடக்க
ஈட்டியால் குத்தப்பட்டு
விழுந்துகிடக்கும் குதிரைகளின்
வேதனையொலி விண்ணைப் பிளக்க
இரு கண்களிலும்
விஷ அம்பு பாய்ந்த
யானைகளின் பிளிறல் சத்தம்
போர்க்களத்தை உலுக்க
உறுப்புகளை இழந்கவர்கள்
மரண ஓலம் எழுப்ப
அந்த நிமிடம் சூன்யமாக
மனிதக் குருதியில்
சாம்ராஜ்யக் கப்பலைச் செலுத்துவதா - என
இதயத்தில கருணை பொங்க
வாள் நழுவி விழ
மகுடம் மண்ணில் சரிய
உதடுகள் புத்தம் சரணம் கச்சாமி
என உச்சரிக்க
யுத்தத்தில் வென்றது அசோகரின் படை
அழிந்தது அவனது ராஜ்ய ஆசைகள்!
அவனும் மனிதன் தான்
கவிஞன் கற்பனை செய்தான்
கருணை பொங்கும் மனிதர்களை
அன்பினால் அரவணைக்கும் உறவுகளை
கால் இடறி விழும் வேளையில்
கண்டுகொண்டிராமல்
ஓடிவந்து கைகொடுக்கும் நணபர்களை
புறத்தை ஒதுக்கி
அகத்தை நேசிக்கும் அழகிகளை
தமிழ்க்கவியென்று சொன்னால்
தலைவணங்கி வழிவிடும்
அரண்மணையின் இரும்புக்கதவுகளை
அவன் கற்பனைச் செய்ததைப் போன்ற
சொப்பனலோகத்தை பணத்தால் சிருஷ்டித்து
கனவான்கள் பலர் இப்பூமியில் சுகித்திருக்க
அவனோ தன்னுடைய சுயகற்பனையைப் கூட
பிரசுரித்து காசாக்க முடியாமல்
பதிப்பக வாசலிலே
நீண்ட தாடியுடனும்,
கசங்கிய ஆடையுடனும்
நெடுநேரம்
எதையோ பறிகொடுத்தவன் போல்
காத்திருக்க ....
அக்கணத்தில்
கவிக்கு ஒரே வெறுப்பு
தமிழை அமுதமாக பருகியபோதும்
பாழும் வயிற்றுக்கு
இன்னும் பசிக்கிறதே என்று!

0 கருத்துகள்:
கருத்துரையிடுக